சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வருகிற டிசம்பர் 27-ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நாடரஜார் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான வருகிற 27-ஆம் தேதி, கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 06-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 27-ஆம் தேதி அன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என்று கூறியுள்ளார்.