டெல்லி நிக்கல்சன் சாலையில் உள்ள ஆட்டோ உதிரி பாகக் கிடங்கில் திங்கட்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லி நிக்கல்சன் சாலையில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் அட்டை பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில், 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் வந்து தீயை அணைக்க போராடினார். அங்கு இருள் சூழ்ந்து இருந்ததால், தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதில் சிரமப்பட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.