எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. கணக்காயரின் சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பல்வேறு அமைச்சகங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு, அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாகேத் கோகலே, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மேற்கு வங்காளத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி வைத்திருப்பது ஏன்? என்று துணைக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அந்த சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசுத் தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல. அது தவறான வார்த்தை.
எந்தெந்த மாநிலங்கள் பொது கணக்காயர் சான்றிதழை அனுப்பவில்லை என்று பெயர் குறிப்பிட்டே சொல்கிறேன். அப்போதுதான் மக்கள் மனதில் சந்தேகம் எழாது. மேற்கு வங்க மாநிலம் 2019 – 2020-ம் நிதியாண்டுக்கான சான்றிதழ் முதல் 2022 – 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு வரையிலான சான்றிதழ் அனுப்பவில்லை. ஆகவே, அம்மாநிலத்துக்கு பாக்கித்தொகை விடுவிக்கப்படவில்லை. முதலில், சான்றிதழ் அனுப்பட்டும். பிறகு நாங்கள் விடுவிக்கிறோம்.
அதேசமயம், கேரள மாநிலம் சான்றிதழ் அனுப்பி வைத்தபோதிலும், புள்ளிவிவரங்களை சரிபார்க்கும் வரை தொகையை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனவே, மத்திய அரசுத் தரப்பில் நிலுவை வைக்கவில்லை. 2022 – 2023-ம் நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் அனுப்பவில்லை” என்றார்.
மேலும், ”கைது செய்யும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாபாரிகளிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.