சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த இனிங்ஸில் 2000 ரன்களை எடுத்த வீரர் விராட் கோலியின் சாதனையை சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவரில் 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68* (39) ரன்கள் எடுத்தனர்.
பின்பு பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ருதுராஜ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 6/2 என தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்தார்.
குறிப்பாக தமக்கே உரித்தான ஸ்டைலில் தென்னாப்பிரிக்க பவுலர்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வெளுத்து வாங்கிய அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (36) ரன்கள் குவித்தார்.
இந்த 56 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் இதுவரை 56 இன்னிங்ஸில் 2041* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை சூரியகுமார் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் விராட் கோலியும் சரியாக 56 இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார். அதை விட இந்த 2000 ரன்களை 1164 பந்துகளில் சூரியகுமார் அடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் சாதனையை தகர்த்துள்ள அவர் யாராலும் நெருங்க முடியாத புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.