மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், இன்று நடந்த கூட்டத்தொடரின்போது மக்களவை பார்வையாளர்கள் அரங்கில் இருந்த 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்தனர்.
மேலும், சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும், எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். உடனே, தாங்கள் வைத்திருந்த புகைக் குண்டுகளை அரங்குக்குள் வீசினர். இதிலிருந்து மஞ்சள் கலரில் கிளம்பிய புகை, எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலூட்டியது.
பின்னர், பிடிபட்ட 2 பேரையும், அவைப் பாதுகாவலர்களிடம் எம்.பி.க்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் மக்களவைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தவிர, நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றிருந்த இருவரும் இதேபோல கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும்.
எம்.பி.க்களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை. மேலும், விமான நிலையங்களின் நுழைவு வாயிலில் விமானப் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷின் இருப்பதுபோல நாடாளுமன்ற நுழைவு வாயிலிலும் ஸ்கேன் மிஷின் பொருத்தப்படும்.
பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடித் தடுப்புகள் பொருத்தப்படும். நாடாளுமன்ற அலுவலர்கள், செய்தியாளர்கள் தனிப் பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் காலதாமத்துடன் வந்தால், அதற்கான தனிப் பாதை வழியாக வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.