நாகாலாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிற பகுதிகளில் செயல்படும் மிகப்பெரிய போதைப்பொருள் அமைப்பு ஒன்றை நாகாலாந்து காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அம்மாநில டிஜிபி கூறியுள்ளார். ஒரு வருடத்தில் இந்த அமைப்பு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான 60 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியுள்ளது.
நாகாலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் பரவியிருக்கும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பை நாகாலாந்து காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி கோகிமா மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் மணிப்பூரைச் சேர்ந்த இரண்டு கடத்தல்காரர்கள் ஹெராயின் கொண்டு சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிப்பட்ட இருவரும் ஒரு வருடத்திற்குள் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 60 கிலோ ஹெராயின் கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கோகிமா காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாகாலாந்து டிஜிபி ரூபின் சர்மா கூறியதாவது, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 12 பேரை போலீசார் இதுவரை வெற்றிகரமாக கைது செய்துள்ளனர். அவர்கள் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தில் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் டிஜிபி கூறினார்.