கனமழையின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை இரயில் சேவை, மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மலை இரயிலில் பயணம் செய்து, நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இடையிடையே பெய்து வந்த கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை இரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்தன. இதனால், மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதை அடுத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் இரயிவே ஊழியர்கள் ஈடுபட்டனர். இரயில்வே தண்டவாளம் சரி செய்யப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் மலை இரயில் சேவை தொடங்கியது. மலை இரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலை இரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயணத்தின்போது, நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தனர்.