மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் குமார் எழுப்பிய கேள்விக்கு ஸ்மிரிதி இராணி பதில் அளித்தார். அப்போது, அனைத்து பணியிடங்களில் மாதவிடாய் காலங்களின் போது பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என தெரிவித்தார்.
மாதவிடாய் என்பது பெண்களில் வாழ்க்கையில் இயல்பானது எனவும், அது குறைபாடு அல்ல என்றும் அவர் கூறினார். மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் உள்ளது என்பதற்காக பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை முன்மொழியக்கூடாது என்றும் ஸ்மிருதி இராணி குறிப்பிட்டார் .
எனினும் மாதவிடாய் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், தேசிய வரைவுக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் இராணி தெரிவித்தார்.
கடந்த வாரம், காங்கிரஸ் எம்பி சசி தரூரின் கேள்விக்கு பதிலளித்த இரானி, அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்தார்.