ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா தொடங்கவுள்ள நிலையில் இன்று பந்தக்கால் நாடும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று காலை திருவையாறு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரமம் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பந்தல் கால் நடும் விழாவில் சபா அறங்காவலர்கள் சி. மிதுன் மூப்பனார், எம்.ஆர். பஞ்சநதம், டெக்கான் என்.கே.மூர்த்தி, என்.ஆர். நடராஜன், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டுவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் மூப்பனார், ” திருவையாற்றில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30 ஆம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது.
இவ்விழாவில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மேலும் இந்த விழாவில் தேசிய நிகழ்ச்சியாக ஜனவரி 27 ஆம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்படும்.
ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் ” என்று கூறினார்.