திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கப் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடந்தே மலையேறி திருமலைக்குச் சென்றுள்ளார்.
உலகில் பணக்கார கடவுளான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாத யாத்திரையாக நடந்தே அவர் திருமலைக்கு சென்றுள்ளார்.
பக்தர்களுடன் இணைந்து பாத யாத்திரையாக இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகா படுகோனுடன் செல்பி எடுத்துக் கொண்டே சென்றனர்.
நேற்று இரவு திருமலையில் உள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.