2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்றும் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்தியா இந்த வருடம் பல மைல்கல் சாதனைகளை செய்துள்ளது. அதில் மறக்கமுடியாது, பெருமைப்படுத்திய 10 நிகழ்வுகளை குறித்து பார்ப்போம்.
1. ஆஸ்கார் விருது :
இந்த ஆண்டு இந்திய சினிமாதுறை இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளது மேலும் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படமான ‘RRR’ படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பெரிதும் வரவேற்பு பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
அதேபோல் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தமிழக இயக்குனர் ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டது. இப்படமானது 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
2. சந்திரயான் 3 :
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியது. மேலும் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இந்த நிகழ்வு என்றும் இந்தியா மட்டுமின்று உலகநாடுகளால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
3. ஆசிய விளையாட்டு போட்டி :
இந்த ஆண்டு விளையாட்டு துறையிலும் இந்தியா சாதித்துள்ளது. சீனாவில் நடைபெற்ற ஆசியா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவு இந்திய 100 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி 41 வெண்கலம் என 107 பதக்கங்களை குவித்து நான்காவது இடத்தைப் பிடித்தது.
அதேபோல் 50 ஓவர்கள் கொண்ட ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா கோப்பையை வென்றது. உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியா தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 20 வருடங்கள் கழித்து இந்தியா உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
4. ஆதித்யா-எல்1 :
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு தொடங்கியது. அதேபோல் அதித்யா எல் 1 சூரியனை புகைப்படம் எடுத்துள்ளது.
5. G20 உச்சி மாநாடு :
இந்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் ஜி 20 மாநாடு பாரத பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
6. T-20 உலக சாம்பியன்ஷிப் :
இந்த வருடம் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
7. இந்திய விமான நிறுவனங்களின் சாதனை :
அரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் 500 ஏ320 ரக விமானங்களை வாங்குவற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது.
முன்னதாக மத்திய அரசிடமிருந்து ஏர்இந்தியாவை கையகப்படுத்திய டாடா குழுமம் அதனை மேலும் விரிவுபடுத்த சமீபத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து 470 விமானங்களை வாங்கிட ஒப்பந்தம் மேற்கொண்டதே மிகப்பெரிய ஒப்பந்தமாக இருந்தது. அதனை இன்டிகோ நிறுவனம் முறியடித்தது.
8. கோழிக்கோடு ‘இலக்கிய நகரம்’ :
யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் கோழிக்கோடு ‘இலக்கிய நகரம்‘ என்றும், குவாலியர் ‘இசை நகரம்‘ என்றும் கோழிக்கோடு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், வட கேரள நகரமான கோழிக்கோடு அம்மாநிலத்தின் இலக்கிய மற்றும் கலாச்சார உலகின் பல முக்கிய ஆளுமைகளின் தாயகமாகும். பல முன்னணி ஊடக நிறுவனங்களைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நகரில், நூற்றுக்கணக்கான பதிப்பகப் பதாகைகள் மற்றும் பல நூலகங்கள் அதன் இலக்கிய பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன.
9. உத்திரகாசி சுரங்கப்பாதை மீட்பு :
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கினர். மீட்புப் பணியின் 16-வது நாளான நவம்பர் 27 இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது. இறுதியாகி சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
10. ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை :
இந்தியாவின் பெங்களுருவில் தும்கூரில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்ச்சாலை திறக்கப்பட்டது.
615 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிரீன்ஃபீல்ட் ஹெலிகாப்டர் தொழிற்சாலை, இந்தியாவின் மொத்த ஹெலிகாப்டர் தேவைகளையும் பூர்த்தி செய்யும். இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையான இது, முதலில் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை(LUH) தயாரிக்கும்.
ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்கள் என்ற கணக்கில் ஹெலிகாப்டர் உற்பத்தி இங்கு தொடங்கும். முதல் LUH ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டு, வெளியிட தயாராக உள்ளது. போர் ஹெலிகாப்டர்கள்(LCH) மற்றும் மல்டிரோல் ஹெலிகாப்டர்கள்(IMRH) போன்ற பிற ஹெலிகாப்டர்களை தயாரிக்க தொழிற்சாலை விரிவுபடுத்தப்படும்.