2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால் அது ஐபிஎல் என்றே சொல்லலாம். உலகக்கோப்பை நிறைவடைந்த பின்னர் அனைவரின் கண்களும் ஐபிஎல் – யை பார்க்க ஆரம்பித்துவிட்டது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்தது முதலே அவரை கேப்டனாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற சர்ச்சை பரவலாக வந்துகொண்டே இருந்தது.
தற்போது அதற்கு அதிகார பூர்வமாக பதில் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.