மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகெங்கிலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த தொழலில் நுட்பத்தால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவிற்குத் தீமைகளும் இருக்கிறது.
ஆம், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் அதே நேரத்தில் மோசடி செய்யக் கூடிய செயலிகளும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான இணையதள மோசடிக்குக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக தற்போது, சில மாடல் மொபைல் போன்கள் வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In எச்சரிக்கை குறிப்பு CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஓ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் மிகமுக்கிய தகவல்களை அபகரிக்கும் வசதியை வழங்க வாய்ப்பளிக்கும் என்று CERT-In ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சாம்சங் சாதனங்களில் இந்த குறைபாடுகள் பல வகைகளில் ஆபத்தை விளைவிக்கும் என்றும் CERT-In அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவை ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஓ.எஸ். கொண்டிருக்கும் சாம்சங் சாதனங்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ், கேலக்ஸி ஃப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்டு 5 மற்றும் பல்வேறு மாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க, சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செக்யூரிட்டி அப்டேட்களை பயனர்கள் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொள்ளலாம் சாதனத்தில் அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் – சாஃப்ட்வேர் அப்டேட் – டவுன்லோட் அன்ட் இன்ஸ்டால் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகள் அனைத்தையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோட், இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.