ஆந்திர மாநிலம் கொடிகொண்டா சோதனைச்சாவடியில் கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 492 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் சிலமத்தூர் அருகே உள்ள கொடிகொண்டா சோதனைச் சாவடி வழியாக ஹைதராபாத்தில் இருந்து கண்டெய்னர் மூலம் பெங்களூருவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சிலமத்தூர் போலீசார் கொடிகொண்டா சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னரை நிறுத்தி சோதனை செய்தனர்.
கன்டெய்னர்க்குள் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில், 294 பாக்கெட்டுகளில் 492 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.