கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன், பேரங்கியூர் ஊராட்சி உள்ளிட்ட 25 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதி விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரங்கியூர் ஊராட்சி உட்பட 25 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவை கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க அரசு தரப்பில் இருந்து பரிசீலனை நடைபெறுவதாக தகவல் வெளியானதால், பேரங்கியூர், அரசூர், ஆனத்தூர், மடப்பட்டு, பெரியசெவலை, சரவணம்பாக்கம் கூட்டுரோடு ஆகிய பகுதி மக்கள் பேரங்கியூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என தெரிவித்தனர்.