5 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் ஆண்கள் மற்றும் ஸ்பெயின் பெண்கள் அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி தொடங்கியது. இதில் இந்தியா, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புல்லிபட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடின. இதில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் 15 நிமிடத்தில் இரு அணிகளும் ஒரு பெனால்டி வாங்கியது. ஆனால் இரண்டு அணிகளாலும் கோல் முடியவில்லை. அடுத்த 15 நிமிடத்தில் கோல் அடித்தே ஆகவேண்டும் என்று இரு அணிகளும் போட்டிப்போட ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஸ்பெயின் அணியின் இக்லிசியஸ் 26வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தியா தனது இரண்டாவது போட்டியில் இன்று பெல்ஜியமை எதிர்கொள்கிறது.
அதேபோல் நேற்று நடைபெற்ற மகளிர் ஹாக்கியில் இந்தியப் பெண்கள் அணி , ஸ்பெயின் பெண்கள் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணியில் குர்ஜித் கவுர் 13வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஸ்பெயின் அணியில் சாரா பேரியோஸ் நவரோ 2வது நிமிடத்திலும், பாட்ரிசியா அல்வாரெஸ் நார்டிஸ் 30 நிமிடத்திலும், ஜூலியா ஸ்ட்ராப்படோ கரேட்டா 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதனால் ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய மகளிர் அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று பெல்ஜியமை எதிர்கொள்கிறது.