அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அருணாசலப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெம்செம் மாட்டே. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதன் பிறகு, 2015-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். வரும் 2024 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். யெம்செம் மாட்டே, அரசியலில் இணையும் முன்பு சங்கலாங் மாவட்ட கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வான யெம்செம் மாட்டே, சொந்த வேலை காரணமாக மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இடாநகர் மாவட்டத்திலுள்ள ராஹோ கிராமத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
அப்போது, மேற்படி கிராமத்துக்கு வந்த சிலர், முன்னாள் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டேவை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், அந்தக் காட்டுப்பகுதியில் வைத்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.