கட்டாக்கில் நடைபெற்று வரும் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கட்டாக்கில் ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு பேட்மிட்டன் என இரண்டு பிரிவிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு :
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இந்தோனேசிய வீரர் ஆல்வி பர்ஹானுடன் விளையாடினார்.
இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் மற்றும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் விளையாடினர். இதில் சதீஷ் குமார் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி-சதீஷ் குமார் விளையாடவுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு :
நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் அவர்களை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இந்திய வீரர்கள் 21-17, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவு :
நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியா அணியில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணை இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை எதிர்கொண்டது.
இதில் இந்திய அணியின் வீரர்கனைகள் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவு :
கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஆகியோர் டென்மார்க் அணியின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் இணையை எதிர்கொண்டது.
இதில் இந்திய அணியின் வீரர்கள் 21-14, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு :
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் உன்னதி ஹூடா உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவுடன் விளையாடினார்.
இதில் இந்திய வீராங்கனை 16-21, 5-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியை சந்தித்தார்.