தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும், குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.