கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
வரும் 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்பாக முகப்பு மண்டபத்தில் ஏககால இலட்சார்ச்சனை நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 27-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலாவும், பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் குழு செயலா் சிவராம தீட்சிதா், துணைச் செயலா் சிவசங்கர தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா். உற்சவ 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.