ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு 2-வது திருத்த மசோதா 2023 மக்களவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
அதோடு, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதாக்கள் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, இரு மசோதாக்களும் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு 2-வது திருத்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்த) மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.