இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனை டாக்டர்கள், அரிய முதன்மை நோயெதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தைக்கு உயிர் காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சிபாய் பிரதீப் பவுடல் என்பவரின் மகன் சுஷாந்த். இவனுக்கு ஒரு வயதானபோது, மிக அரிதான நோய் எதிர்ப்புத் திறனின் ARPC1b நோயால் பாதிக்கப்பட்டான. இது அவனது நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதித்தது. இதனால், மீண்டும் மீண்டும் உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகினான்.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இராணுவ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டான். ஆனால், அவனுக்கு HLA பொருந்திய உடன்பிறப்பு நன்கொடையாளர்கள் இல்லை. இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள ஹீமாட்டாலஜி குழு, தகுந்த நன்கொடையாளரைக் கண்டுபிடித்து, துல்லியமாக திட்டமிடப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையைத் திட்டமிடுவதற்கான கடினமான பயணத்தைத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 30-ம் தேதி பொருத்தமற்ற நன்கொடையாளர் மூலம் சுஷாந்த் பவுடலுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அந்த தன்னார்வ நன்கொடையாளரின் சொந்தக் குறைபாடுள்ள செல்கள் நீக்கப்பட்டு, அதிகளவு ஹீமோதெரபி மூலம் புதிய ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த செயல்முறை குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்களை ஆரோக்கியமானதாக மாற்றத்தக்கது.
தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறார். இது இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.