சூரத்தில் இராமர் கோவில் கருப்பொருளில் வைர நெக்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் பிறந்த இடமான அயோத்தியின் இராம ஜென்ம பூமியில் ஸ்ரீ இராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டதட்ட ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டப்பட்டு வரும் இராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பணியை, இதற்கென அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் இராமர் கோவில் கருப்பொருளில் 5,000 அமெரிக்க வைரங்களை கொண்டு நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வைர நெக்லஸ் 2 கிலோ வெள்ளியால் ஆனது, இதனை 40 கைவினைஞர்கள் சேர்ந்து 35 நாட்களில் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து வைர வியாபாரி கூறுகையில், “இது எந்த வணிக நோக்கத்திற்காகவும் இல்லை… நாங்கள் அதை ராமர் கோவிலுக்கு பரிசளிக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.