தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் முப்டைகள் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய .மாவட்டங்கள் மழை நீரில் தத்தளிக்கிறது. இதனையடுத்து இந்திய கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக இப்பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 932 மிமீ மழை பதிவாகியுள்ளது என்றும், இது 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்று கூறினார். 1992 இல் பதிவான மாஞ்சோலையில் 965 மிமீ மழை பெய்யதது. அதற்கு பிறகு இரண்டாவது அதிக மழைப்பொழிவு என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவத்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் ஆறு பேரிடர் மீட்புக் குழுக்களையும், கடல் மற்றும் கரையோர இடங்களில் நிலைமையை கண்காணிக்கும் ஒரு ஹெலிகாப்டருடன் ஒரு ஆஃப்ஷோர் ரோந்துக் கப்பலையும் நிறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், சென்னையிலிருந்து NDRF வீரர்களின் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மற்றும் போக்குவரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், ICG அதன் Dornier விமானம் மற்றும் ALH Mk3 ஹெலிகாப்டரை மதுரைக்கு அருகில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது.
தூத்துக்குடிக்கு துடுப்பு படகுகள், விசைப்படகுகள் மற்றும் கூடுதல் பேரிடர் மீட்புக் குழுவினருடன் மீட்பு நீர்மூழ்கிக் குழுவையும் ஐசிஜி அனுப்பியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களில் 10 குழுக்களை (தலா 25 பேர் கொண்ட) நிறுத்தியுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணத்தில் உள்ள NDRF 04 பட்டாலியனில் இருந்து அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் தெற்கு விமானப்படை சூலூர் விமானப்படை நிலையத்தில் இருந்து MI-17V5 ஹெலிகாப்டர்களை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பணித்துள்ளது. இந்திய கடற்படை தரை மற்றும் வான்வழி மீட்புக் குழுக்களை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது
கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உட்பட 130க்கும் மேற்பட்டோரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. படைகள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.