வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் ஏற்பட்டிருக்கிறது. இது கான்சூ மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. மேலும், கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், இரு மாகாணங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிலநடுக்கம் காரணமாக அம்மாகாணத்தில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இன்று காலை முதல் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையில், இடிந்திருக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கான்சூ மாகாணத்தில் 100 பேரும், கிங்காய் மாகாணத்தில் 11 பேரும் உயிரிழந்திருப்பதாகவும், கான்சூ மாகாணத்தில் 96 பேர், கிங்காய் மாகாணத்தில் 124 பேர் காயமடைந்திருப்பதாகவும் சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.