வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தில், சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு பிரபல கோவிலில் மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமிகோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் திட்டமிட்டது. இதற்காக, ராஜகோபுரத் திருப்பணிக்காக கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அன்று பாலாலயம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, உபயதாரர்கள் வாயிலாக ராஜகோபுர திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.