உலகளாவிய சவால்களுக்கு குறைந்த விலை, தரம், நிலையான தீர்வுகளை இந்தியாவால் வழங்க முடியும் என்று உலகம் நம்பிக்கை கொண்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது, அரசு அமைச்சகங்கள், துறைகள், தொழில்கள் மற்றும் பிற நிறுவனங்களின் அழுத்தமான பிரச்சனைகளைத் தீர்க்க, மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கான நாடு தழுவிய முயற்சியாகும்.
கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. இதன் மூலம், கடந்த 5 பதிப்புகளில் பல புதுமையான தீர்வுகள் பல்வேறு களங்களில் காணப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் கிராண்ட் ஃபைனல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இது 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 44,000 குழுக்களிடமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட யோசனைகள் பெறப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் முதல் பதிப்பை ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகமாகும்.
மேலும், நாடு முழுவதும் 48 நோடல் மையங்களில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் 12,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் பங்கேற்கின்றனர். விண்வெளி தொழில்நுட்பம், ஸ்மார்ட் கல்வி, பேரிடர் மேலாண்மை, ரோபாட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் தீர்வுகளை வழங்குவதற்காக மொத்தம் 1,282 குழுக்கள் இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் கிராண்ட் ஃபைனலில் பங்கேற்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இளம் கண்டுபிடிப்பாளர்களின் குறிப்பிடத்தக்க சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும் புத்திசாலித்தனம் பாராட்டப்பட வேண்டியதாகும்.
ஹேக்கத்தானின்போது அவர்களின் கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக இரயில்வே துறைக்கு உதவும். அரசாங்கம் இரயில்வே துறையில் பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய இரயில்வே அதன் உருமாற்ற கட்டத்தை கடந்து வருகிறது. இதற்காக மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து வருகிறது. தளவாடங்களிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
21-ம் நூற்றாண்டின் இந்தியா, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்’ என்ற மந்திரத்துடன் முன்னேறி வருகிறது. இந்தியா ஒரு திருப்புமுனையில் உள்ளது. அங்கு ஒவ்வொரு முயற்சியும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும்.
இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது. நாட்டில் இன்று மிகப்பெரிய திறமையான குழு உள்ளது. தீர்க்கமான மற்றும் வலுவான அரசாங்கம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளது. ஆத்மநிர்பர் பாரத் என்ற குறிக்கோளுடன் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உங்கள் அணியில் வங்கதேச மாணவர்களைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு உயர்கல்வி பயில வருவதற்காக, ‘ஸ்டடி இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. தவிர, இந்தியா எந்தத் தொழில்நுட்பத்தையும் இறக்குமதி செய்யக் கூடாது என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
உலகளாவிய சவால்களுக்கு இந்தியா குறைந்த விலை, தரம், நிலையான தீர்வுகளை வழங்க முடியும் என்று உலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. நாம் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை ஒழுங்குமுறை முறையில் பயன்படுத்தினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேசமயம், தவறான வழியில் பயன்படுத்தினால் அது உண்மையில் ஆபத்தாக முடியும். உதாரணமாக, டீப் ஃபேக் வீடியோக்களை எடுத்துக் கொள்ளலாம். எனவே, ஒரு வீடியோ அல்லது புகைப்படத்தை நம்புவதற்கு முன்பு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய கட்டமைப்பிற்கு இந்தியாவும் அழுத்தம் கொடுக்கிறது” என்றார்.