வடமேற்கு சீனாவில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 127 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இது கான்சூ மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. மேலும், கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், இரு மாகாணங்களிலும் பெரும் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதை அடுத்து, நேற்று காலை முதல் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் கான்சூ மாகாணத்தில் 113 பேரும், கிங்காய் மாகாணத்தில் 14 பேரும் என மொத்தம் 127 பேர் உயிரிழந்தனர். மேலும், இரு மாகாணங்களிலும் 734 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்புப்படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவி செய்ய தைவான் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, நிலநடுக்கத்தில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீராகும் என்று நம்புகிறோம். பேரிடர் மீட்புப் பணியில் சீனாவிற்கு உதவ தைவான் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.