டெல்லியில் நடந்த ‛இண்டி’ கூட்டணிக் கூட்டத்தில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சிகள் இணைந்து ‛இண்டி’ என்கிற பெயரில் கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியின் தலைவர்கள் அவ்வப்போது கூடி 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இக்கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தியில் பேசினார். எனவே, அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறும்படி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜாவிடம் கூறியிருக்கிறார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். இதனால் நிதீஷ்குமார் கோபமடைந்தார்.
“இந்தி இந்தியாவின் தேசிய மொழி. ஆகவே, தி.மு.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு சென்றபோதே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்தும் போய்விட்டது” என்று கடுமையாகக் கூறியதோடு, மொழி பெயர்ப்பதை நிறுத்துமாறு மனோஜ் ஜாவுக்கும் உத்தரவிட்டார்.
இதனால் கூட்டணியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முந்தைய 3 கூட்டங்களிலும் நிதீஷ் குமாரின் பேச்சை மனோஜ் ஜாதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் காரணமாகவே, இந்த முறையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்படி மனோஜ் ஜாவிடம் டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார்.
இக்கூட்டத்தில் நிதீஷ் குமார் அதிருப்தியுடன் காணப்பட்டார். கூட்டம் முடிந்த பிறகு கூட்டணித் தலைவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஆனால், இதில் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. மேலும், ‘இண்டி’ கூட்டணி பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரை யாருமே முன்மொழியவில்லை. ஆகவே, இண்டி கூட்டணியில் இருந்து பீகார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளியேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.