இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றிப்பார்க்க, நாட்டிலேயே முதல்முறையாக,Gyrocopter சுற்றுலாவை உத்தரகாண்ட் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள இமயமலையின் அழகைப் பார்த்து ரசிப்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றன. இதன் மூலம் அம்மாநில அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.
சுற்றுலாத்துறை மூலம் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால், அம்மாநில அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றிப் பார்க்க, கைரோகாப்டர் சுற்றுலா சேவையை அம்மாநில அரசு தொடங்க உள்ளது.
இதற்காக ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து, கைரோகாப்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற பைலட்கள் இந்த வாகனத்தை இயக்க உள்ளனர்.
கைரோகாப்டர் என்பது, ஹெலிகாப்டரை விட அளவில் சிறியது. மலைப் பகுதிகளில் பறக்க பாதுகாப்பானது. இதில், இருவர் மட்டுமே பயணிக்க இயலும்.
உத்தரகாண்ட் சுற்றுலாத்துறையும், ராஜாஸ் ஏரோஸ்போர்ட்ஸ் அண்ட் அட்வென்ச்சர்ஸ்’ என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, இமயமலை தொடரில் கைரோகாப்டர் சுற்றுலா சேவையைத் தொடங்க உள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம், ஹரித்வாரில் உள்ள பைராகி முகாமில் கடந்த 16-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.