அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 1,309 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 22-ம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், கேள்வி நேரத்தின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இரயில்வே தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 1,309 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதுபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 560-க்கும் மேற்பட்ட நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நகரங்களை இரயில்வேயுடன் இணைக்க போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாஸ்டர் பிளான் ஆகியவற்றில் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டில் புதிய இரயில் பாதைகளை அமைப்பதை அதிகரித்திருக்கிறது. கடந்த 9.5 ஆண்டுகளில் 25,000 கி.மீ. புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாளொன்றுக்கு 14 கி.மீ. இரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.