இரயில்வேயில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆஜராக லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தின. இந்நிலையில் சிபிஐ லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி, மகனுக்கு எதிராக ஜூலை 3-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ரயில்வேயின் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள், நடைமுறைகளுக்கு எதிராக மத்திய ரயில்வேயில் சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
மேலும், வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, தங்களின் உறவினர்கள் மூலமாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலங்களை விற்றுள்ளனர்.
அந்த நிலங்கள் சந்தை மதிப்பில் இருந்து நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு தள்ளுபடி விலையில் விற்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தனது மனைவி ராப்ரி தேவி, மகள் மிஷா பாரதி, மற்றும் மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் பலருடன் இணைந்து குற்றச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தின. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கில், ஆஜராக லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தேஜஸ்வி யாதவ் டிசம்பர் 22ம் தேதியும், லாலு பிரசாத் டிசம்பர் 27ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.