தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் நாளுக்கு நாள் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இது தொடர்பாக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்குச் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் காவனூர். இவர், கடந்த 2 ஆண்டுகளாகத் திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், 100 நாள் வேலை தொடர்பாகத் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் ரமேஷ் ஆய்வுக்கு வந்துள்ளார். அப்போது ஊராட்சி அலுவலகம் பூட்டி கிடந்துள்ளது. இதனால், அதைப் போட்டோ எடுத்து ஊராட்சி அலுவலக வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அலுவலகம் வந்த ஜெயலட்சுமி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து ஊராட்சி அலுவலகம் வந்த தலைவர் உஷா, பதறிப்போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், ஜெயலட்சுமி உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஊராட்சி செயலாளர் ஜெயலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் ஒருவரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசின் நிர்வாகத்திறன் இன்மையே காட்டுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.