எகிப்து நாட்டின் அதிபா் தேர்தலில், தற்போதைய அதிபா் அப்தெல் பாத்தா எல்சிசி 89.6 சதவீத வாக்குகள் பெற்று, மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.
எகிப்து நாட்டின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்நாட்டின் 6 கோடியே 70 இலட்சம் மக்கள் வாக்களிப்பதற்காக, 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதில், தற்போதைய அதிபராக உள்ள அப்தெல் பாத்தா எல்சிசியை எதிர்த்து, குடியரசு கட்சியின் ஹசெம் உமர், எகிப்திய ஜனநாயக கட்சியின் பரித் சக்ரான், லிபரல் கட்சியின் அப்தெல் சனத் யமாமா ஆகியோர் போட்டியிட்டனர்.
நான்கு முனை போட்டி நிலவினாலும், அப்தெல் பாத்தா எல்சிசி தான் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறின.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி, அப்தெல் பாத்தா எல்சிசி-க்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதை அடுத்து, அந்நாட்டின் அதிபராக அவா் மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அப்தெல்பாத்தா எல்சிசிக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேச தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அப்தெல்பாத்தா எல்சிசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-எகிப்து உறவை மேலும் ஆழப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.