மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுதில்லியில் நேற்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சர் டாட் மெக்லேவுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது, பரஸ்பர வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வர்த்தகத்திற்கான வசதியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர்கள் வர்த்தக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், வர்த்தகத் தடைகளைக் குறைப்பதற்கும், இரு நாடுகளைச் சேர்ந்த வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்த சூழலை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இந்தச் சூழலில், இந்தியாவுக்கு மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் பாராட்டினார். அனைவரின் நலனுக்காகவும் நடைமுறை உலகளாவிய தீர்வுகளைக் காண முயற்சிக்கும் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தையும் அதன் விளைவுகளையும் அவர் பாராட்டினார்.
மேலும் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
வேளாண்மை, வனம், மருந்து, போக்குவரத்து, கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.