திருநெல்வேலி – திருச்செந்தூர், திருச்செந்தூர் – திருநெல்வேலி இரயில்கள் உட்பட 12 இரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
இரயில் நிலையம் மற்றும் தண்டவளப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இரயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிகற்கள் அடித்து செல்லப்பட்டன. இதன் காரணமாக பல இடங்களில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்ததால், இரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தென் மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வருகிறது. வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால், சில இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி – திருச்செந்தூர், திருநெல்வேலி – தூத்துக்குடி, திருச்செந்தூர் – திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் இரயில்கள் உட்பட 12 இரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.