இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 669 ஆக உள்ளது. குறிப்பாக கேரளாவில் மட்டும் 2 ஆயிரத்து 341 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இறந்தனர். 211 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வசதிகளை வழங்கவும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐசியு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்றால், 21 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கோவாவில் மட்டும் 19 பேர் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.