கடந்த 2006 முதல் 2011 -ம் ஆண்டில் திமுக ஆட்சி நடைபெற்ற போது, அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர் பொன்முடி.
பின்னர் அதிமுக ஆட்சி வந்தது. அப்போது, பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 -ம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்தது. இந்த திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சியில், அன்றைய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
இதனிடையே, பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என்றும், அவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தார் நீதிபதி ஜெயசந்திரன். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 204-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 -ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பொன்முடி, ஜனவரி 2 -ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைத்ததும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பு உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.