இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்வாகியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங் பதவி விலகியதையடுத்து, தாமதமாக்கப்பட்டு வந்த WFI அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் WFI அமைப்பின் தலைவர் பதவிக்கு, பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கும், காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷெரானும் போட்டியிட்டனர்.
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவி மட்டுமின்றி, மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், கணக்காளர், இரண்டு கூடுதல் செயலாளர்கள் மற்றும் ஐந்து நிர்வாகப் பதவிகளுக்கும் சேர்த்தே இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மல்யுத்த வீரர்களின் ஆதரவு பெற்ற அனிதா ஷெரானை விட 33 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் இருந்த 50 ஓட்டுகளில், 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்த 47 ஓட்டுக்களில் சஞ்சய் சிங் 40 ஓட்டுக்களையும், அனிதா ஷெரான் வெறும் ஏழு ஓட்டுக்களையும் மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியை சேர்ந்த சஞ்சய் சிங் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் மேலும் இவர் முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் ஆவார்.
தனது வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், ” கடந்த 7-8 மாதங்களாக மல்யுத்த போட்டி நடைபெறாமல் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களுக்கு தனது வெற்றி அவர்களின் வெற்றி ஆகும் ” என்று கூறினார்.