ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின் கடைசி போட்டியில் இந்தியா கடைசி 10 நிமித்தில் 2 கோல் அடித்து, 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புல்லிபட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இதில் இந்தியா ஆண்கள் அணி தான் விளையாடிய முதல் மூன்று போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் ஸ்பெயின் அணியுடனும், இரண்டாம் போட்டியில் பெல்ஜியம் அணியுடனும், மூன்றாவது போட்டியில் ஜெர்மனியுடனும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்திய தனது கடைசி லீக் போட்டியில் நேற்று பிரான்ஸ் அணியுடன் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் 20 மற்றும் 60 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவு செய்தார். ஹர்மன்பிரீத் சிங் 25 மற்றும் 56 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவு செய்தார். சாகர் பிரசாத் 16 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
பிரான்ஸ் அணியில் லூகாஸ் மான்டெகோட் 11 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். எட்டியென் டைனெவெஸ் 28 மற்றும் 53 ஆகிய நிமிடங்களில் தனது இரண்டு கோலை பதிவு செய்தார். காஸ்பார்ட் பாம்கார்டனின் 43வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இப்போட்டியில் முதல் காலிறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின்னர் இரண்டாம் காலிறுதி முடிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மூன்றாம் காலிறுதியில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தது. நான்காம் கால்இறுதியின் தொடக்கத்திலேயே பிரான்ஸ் அணி கோல் அடித்து 4-3 என்று முன்னிலை பெற்றது.
அப்போது கடைசி 10 நிமிடத்தில் இந்தியா 2 கோலை அடித்து, 5-4 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் இந்தியா இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்கிறது.