கடந்த 2011 -ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாண சுந்தரம். அவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கல்யாண சுந்தரத்திற்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இதனால், கல்யாண சுந்தரம் அமைச்சர் பதவியை இழந்தார்.
இதனையடுத்து, அவர், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கல்யாண சுந்தரத்தை விடுதலை செய்தார்.
ஆனால், கல்யாண சுந்தரம் விடுதலையை எதிர்த்து போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கல்யாண சுந்தரத்தை விடுதலை செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
2021 -ல் பாஜக சார்பில் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு கல்யாண சுந்தரம் வெற்றி பெற்று தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பிராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.