தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள டயப்பர் மற்றும் பேம்பர்ஸ் பொருட்கள் தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ராஜேந்தர் நகர் பகுதியில் டயப்பர் மற்றும் பேம்பர்ஸ் பொருட்கள் தயாரிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவி கிடங்கில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிய தொடங்கியது. கிடங்கில் இருந்து வெளியேறிய புகையால், அப்பகுதியில் இருந்த மக்கள் மூச்சு விட சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.