இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடியது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருக்கு பின் தென்னாப்பிரிக்கா மண்ணில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர் இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து அவர், ” எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதும் ஆடுகளத்தையும், பவுலர்களின் மனநிலையையும் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் கிடைக்கும்.
அதேபோல் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை எடுத்து கொள்ள முடியும். திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் நிச்சயம் பெருமை கொள்வார்கள். கடினமான நேரத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார். அவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.
இந்திய அணியின் தரம் என்னவென்பதை இதற்கு முன் ஆடியவர்கள் ஒரு பெஞ்ச்மார்க் வைத்து சென்றுள்ளார்கள். அவர்களின் இடத்தில் ஜூனியர் வீரர்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதேபோல் பவுலர்களுக்கு இது எளிய தொடர் அல்ல. ஏனென்றால் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடி சாதாரணம் கிடையாது. ஆனாலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்த சஞ்சு சாம்சன், தனது முஷ்டியை மடக்கி காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரின் ஆட்டத்தை பார்த்து இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டினர்.
கேரளா மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக முதல் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை காண்பித்துள்ளார் சஞ்சு சாம்சன் என்று ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.