இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதைத் தமிழக வீரர் சாய் சுதர்சன் வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று முடிந்தது.
இந்த தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாகச் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். தொடக்க வீரராகக் களமிறங்கிய சாய் சுதர்சன் தான் விளையாடிய முதல் போட்டியில் 55 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாவது போட்டியில் 62 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடினாலும் பீல்டிங்கில் அற்புதமாக கேட்ச் பிடித்து போட்டியை மாற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்குப் பின் ஒவ்வொரு தொடரிலும் சிறந்த ஃபீல்டருக்கான விருது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் வழங்கி வந்த நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கு பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அஜய் ரத்ரா செயல்பட்டார். அவரும் சிறந்த பீல்டருக்கான விருதை வழங்கினார்.
இந்த தொடரில் சிறந்த பீல்டருக்கான விருது தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் 6 கேட்ச்களை பிடித்திருந்தாலும், அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சாய் சுதர்சனுக்கு இந்த விருதை அளித்து அணியினர் உற்சாகப்படுத்தினர்.