கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை உணர்ந்து அந்த நாடு அத்தகையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரிந்தம் பக்சி, ”பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் அமெரிக்கப் பயணம் குறித்த செய்திகளைப் பார்த்தோம். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்தும், எல்லை தாண்டிய தாக்குதல் குறித்தும் இந்தியாவுக்கு இருக்கும் கவலைகள் அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மற்ற நாடுகளும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.
”வணிகக் கப்பல்கள் சுதந்திரமாக இயக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. எனவே, செங்கடலில் ஏற்பட்டுள்ள நிலையை நாங்கள் உண்ணிப்பாக கவனித்து வருகிறோம்.
கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்தியா இருக்கிறது. கடற்கொள்ளையாக இருந்தாலும், வேறு பிரச்சினைகளாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தார் மரண தண்டனை விதித்த விவகாரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அரிந்தம் பக்சி, ”இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 3 விசாரணைகள் நடந்துள்ளன. தோஹாவில் உள்ள நமது தூதர் டிசம்பர் 3 ஆம் தேதி 8 பேரையும் சந்திக்க தூதரக அணுகல் கிடைத்தது. இதைத் தாண்டி, இந்த கட்டத்தில் பகிர்ந்து கொள்வதற்கு என்னிடம் வேறு தகவல் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதில் அளித்தவர், “இந்த விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரம் எழுப்பப்பட்ட போதெல்லாம், நாங்கள் பிரச்சனையை எப்படிப் பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம்.
முக்கியப் பிரச்சினை என்னவென்றால் அந்த நாடு, தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும், இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கும் இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை உணர்ந்து அந்த நாடு அத்தகையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.