செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் பிரேக் பகுதியில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு நேற்று வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.
இதனால், அச்சமடைந்த மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 24 வயதான டேவிட் கோசாக். இதற்கு முன்னர் எந்த குற்ற வழக்கும் இவர் மீது பதிவாகியிருக்கவில்லை. அந்த பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த வரலாற்று மாணவரான இவர், படிப்பில் திறமையானவர் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லை. இந்த தாக்குதலை இவர் தனியாக திட்டமிட்டு செய்திருக்கிறார். அவரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் இருந்தன என்று கூறினார்.