ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இந்நிலையில் இந்த தொடரின் போது தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ZC suspends two players over recreational drug use
Details 🔽https://t.co/CS5pnD6aOO pic.twitter.com/Qy1kAjjU1P
— Zimbabwe Cricket (@ZimCricketv) December 21, 2023
அந்த வகையில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ஆலரவுண்டர்களான வெஸ்லி மதவீரா மற்றும் பிரன்டன் மவுடா ஆகிய இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் போதைப் பொருளை உட்கொண்டதற்காக எடுக்கப்பட்ட சோதனையில் அவர்கள் இருவருக்கும் பாசிட்டிவாக ரிசல்ட் வந்துள்ளதால் ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை மீறி நடந்து கொண்டதாக அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதான வெஸ்லி மதவீரா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்காக நட்சத்திர வீரராக விளையாடியிருந்தார். அதேபோல 26 வயதான பிரெண்டன் மவுதா ஜிம்பாப்வே அணிக்காக 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்
மேலும் இவர்கள் இருவரும் செய்த குற்றம் குறித்து ஜிம்பாவே கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” வெஸ்லி மதவீரா மற்றும் மவுடா இருவரும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது போட்டிக்கு முன்னதாக தடை செய்யப்பட்ட பொழுதுபோக்கு மருந்தை எடுத்துக் கொண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஒழுங்கு விசாரணைக்கு ஆஜராகும் வரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்கு பிறகே அவர்களது தண்டனை குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளது.