ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து, வந்த நிலையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக போராட ஆப்கானிஸ்தானிற்கு 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். மொத்த ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 30 சதவீதம் அதாவது சுமார் 13 மில்லியன் பேர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2.3 மில்லியன் பேர் சிறிய அளவிலான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறப்பதைத் தடுக்க மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து மருந்து பொருட்களை வழங்குவதற்கு, உலக சுகாதார அமைப்புக்கு 185 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.