தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் பயிற்சி போட்டியிலிருந்து திடீரென விலகிய விராட் கோலி மும்பைக்கு வருகிறார் என்று கூறப்பட்டது ஆனால் அவர் மும்பைக்கு வரவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ODI, டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று தொடரில் இந்திய அணி விளையாடிவருகிறது.
அதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றதாகக் கூறப்பட்டது. அதேபோல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க முடியாது என்று கூறிவிட்டு, டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதாக ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு கூறி அதற்கான தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பயிற்சி போட்டியிலிருந்து விலகி, திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
அதேபோல் நேற்றிரவு தென்னாப்பிரிக்கா புறப்படத் திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மும்பை வரவில்லை என்றும், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருக்கும் லண்டனுக்கு விமானம் ஏறியதாகத் தெரிய வந்துள்ளது.
திடீரென மனைவி அனுஷ்காவைச் சந்திக்க விராட் கோலி சென்றது ஏன் என்று எந்த காரணமும் வெளிவரவில்லை. உலகக்கோப்பை தொடரின் போதே விராட் கோலி பயிற்சி போட்டிகளிலிருந்து விலகி, குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.