இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 406 ரன்களை எடுத்து 187 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனையாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் பெத் மூனி களமிறங்கினர்.
இதில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பெத் மூனி 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலிசா ஹீலி 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 5 ரன்களை எடுத்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 219 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார். சினே ரானா 3 விக்கெட்களையும், தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்ம்ரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அற்புதமாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி 90 ரன்களை எடுத்தனர்.
சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களின் கூட்டணி ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஷஃபாலி வர்மா 8 பௌண்டரீஸ் என மொத்தமாக 40 ரன்களை எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சினே ரானா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த மந்தனா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிச்சா கோஷ் 52 ரன்களும், பூஜா வஸ்த்ரகர் 47 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்களும், தீப்தி சர்மா 78 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய பெண்கள் 406 ரன்களை எடுத்து 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் கிம் கார்த் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜெஸ் ஜோனாசென் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.